I WILL GIVE SOME AUDIO CLIPS FEATURING OUR SINGING ANGEL BALU . ENJOY THE HONEY DIPPED VOICE .
FIND OUT THE MOVIE AND SONG .

Monday, June 4, 2012

HAPPY BIRTHDAY BALU!!


ILAIYARAAJA WISHES SPB





இன்று (4 ஜூன் 1946) ”பாடும் நிலா”வின் பிறந்த நாள். இசைஞானி, 27.2.1997 குமுதம் வார இதழில் தன் நண்பனுக்காய் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

பாலா!

உனக்கு நினைவிருக்கோ இல்லையோ.. வெங்கட்ராவ் என்கிற தெலுங்கு நண்பரின் மனைவி நடத்திய நர்சரி ஸ்கூலுக்காக நீ இசை நிகழ்ச்சி நடத்தின இடத்துல நான் உன்னை முதன் முதலா பார்த்தேன். அப்போது ஒண்ணு, ரெண்டு படத்துல நீ பாடி இருந்தே! ‘ஆயிரம் நிலவே’ பாட்டுக்குப்பின் உன் பேர் வெளியில தெரிஞ்சுது.

உன்னோட இசைக்குழுவிலிருந்த அனிருத்ரா என்ற ஆர்மோனியக் கலைஞர் எனக்கும் நண்பர். உனக்குன்னு இசைக்குழு ஒன்று அமைக்க நீ என்னைக் கேட்டபோது நான் ’ஏற்கனவே அனிருத்ரா இருக்காரே’ன்னு தயங்கினேன். ஆனா நீயும் வெங்கட்ராவும் நீ பாடின இசைத் தட்டுக்களை, நொட்டேஷன் எடுப்பதற்காக என் கைகளில் திணிச்சிட்டுப் போயிட்டீங்க.

அப்புறம், மாலை நேரங்களில், உன்னோட ரங்கராஜபுரம் வாடகை வீட்டுல நாம அடிச்ச இசைக் கொட்டங்களை, மனசுக்குள்ளார இருக்கும் அந்த தூசு படிஞ்சுபோன பக்கங்களை, தூசி தட்டிவிட்டு, படிச்சுப் பார்க்க இதை ஒரு சந்தர்ப்பமா நான் பயன்படுத்திக்கறேன். நீ ஒண்ணும் கண்டுக்காதே!

ஜி.கே.வி. (ஜி.கே. வெங்கடேஷ்) இசையமைச்ச ‘நாட்டக்கார ராயலு’ என்ற படத்துல எப்படியாவது உனக்கு ஒரு பாட்டு பாட சான்ஸ் வாங்கிக் கொடுத்திடணும்னு நான் எடுத்துக்கொண்ட முயற்சிகளை நினைச்சா சிரிப்பு வருது. காரணம் பலாப் பழத்துல ஈயைப் பிடிச்சு உட்கார வைக்கிற வேலை அது! மடையா! மடையா! உன்னை இல்லடா, என்னை சொல்றேன்!

அனங்கா பள்ளி என்ற ஊர்ல கச்சேரியை முடிச்சிட்டு ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் இல்லாத காரணத்தால ராத்திரி ரெண்டு மணிக்கு ரயில்வே ஸ்டேஷன்ல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கம்பார்ட்மெண்ட்ல ஏறி, தூங்கிப் போனதும், காலையில பத்து மணிக்கு ரயில் ஆடின ஆட்டத்துல கண் விழிச்சுப் பார்த்தபோது, அது ஆடு மாடுகளை அடைச்சுப் போடுற கம்பார்ட்மெண்ட்டுனு தெரிஞ்சு, வாத்தியக்காரர்கள் கத்துனதும், உனக்கு அப்போது தெரின்சிருக்க நியாயமில்லை. ஏன்னா, நீ ஹைதராபாத்ல இருந்து ஃபிளைட்ல போயிட்ட! அப்புறம் தெரிஞ்சிருக்கும்!

இசையமைப்பாளனா ஆனபின் ஏதோ ஒரு மனத்தாங்கல்ல, உனக்கு நான் பாட்டே கொடுக்கல. ஏதோ ஒரு இடத்துல நீயும் நானும் சந்திச்சபோது, “ஏண்டா மடையா! என்னையெல்லாம் பார்த்தா உனக்கு ஒரு பாடகனாத் தெரியலையா?ன்னு நீ கேட்டவுடன், என்னுடைய மனத்தாங்கல் எல்லாம் காற்றுப்போன பலூன் போல ஆனது. என்னுடைய படத்துக்காக நீ பாடின முதல் பாட்டு “ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்”..! டேய் பாலா.. உன்னோட நட்பு ஒரு நாளோட போற விஷயமா என்ன? அந்த ஒரு நாள், இன்னிக்குக் கேட்டாலும் கடந்த முப்பது வருஷங்களையும் கடந்து நிற்பதை உணர முடியுது. என்னோட கற்பனைக்கு நீ குரலா இருந்திருக்கே. மறக்கவே முடியாத பாடல்களையெல்லாம் நீதான் எனக்குப் பாடியிருக்கே. வேறு யாராவது கூட பாடியிருக்கலாம். ஆனா ஏன் அப்படி நடக்கலே?

உன்னிடம் எனக்குப் பிடித்த சமாச்சாரங்கள்:

• ஒரு பிரபலமான பாடகனாக நீ இருந்தபோதுகூட, உன்னிடம் ஆர்மோனியம் வாசிக்கிறவனாக இருந்த என்னிடமும், மற்ற வாத்தியக்காரர்களிடமும் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் நீ பழகியது.

• பாட்டு சொல்லிக்கொடுத்தவுடன் பிளாட்டிங் பேப்பர்போல ஒத்தி எடுப்பது.

• ரெக்கார்டிங்கில் பாடுவதைவிட கச்சேரிகளில் நன்றாக மெருகேற்றிப் பாடுவது.

நீயும் நானும் ஒரே நேரத்தில் சினிமாவுக்கு வந்தோம். உன்னை ஒரு பாடகனாக நானும், என்னை ஒரு இசையமைப்பாளனாக நீயும் நினைக்கறதில்லை என்பது உனக்கும், எனக்கும்தான் தெரியும்.

மனசுக்குள்ளே எவ்வளவு அசிங்கங்கள் இருந்தாலும், அதே மனசுக்குள்ளே இருந்து எவ்வளவு புனிதமான இசை வெளியில் வருது! அசிங்கமான மனசுன்னு தெரிஞ்சிருந்தும், ஏதோ ஒரு சக்தி மனசுல உட்கார்ந்து, என்னென்னத்தைக் கொண்டு வருது! அடேயப்பா!

மாமேதை மோசார்ட் சொன்னான்: “நான் ஒரு அசிங்கமானவன். ஆனால் என் இசை அசிங்கமானது அல்ல”

ஒண்ணா ரெண்டா, எத்தனை தடவை அந்த சக்தி, நம்மோட கலந்து எத்தனையோ வடிவங்களை வெளியேத்திட்டுப் போயிருக்கு!

தவறு பண்ணியிருந்தாலும் மன்னிச்சு அந்த சக்தி வந்து கலந்து போறதனால நீ கர்வப்படு! கர்வப்படும் அருகதை உனக்கு இருக்கிறது.

நல்லதோர் வீணையைப் புழுதியில் எறிந்த பராசக்தி, உன்னை, என்னைப் போன்ற புல்லை எடுத்துப் புல்லாங்குழலாக்கிவிட்டாள். இந்தப் புல்லுக்குத் தெரியும் இது புல்லாங்குழல் இல்லை என்று.

பராசக்தி என்று எங்கேயோ தனியா இல்லை. நமக்கு வேலை கொடுத்த தயாரிப்பாளர்கள். வேலை வாங்கிய டைரக்டர்கள், வேலையை ரசிக்கிற ஜனங்கள்தான் பராசக்திகள். பாரதி! பராசக்தி உன்னைப் புழுதியில் எரியவில்லை. எங்க மனசுக்குள்ளதான் எறிந்திருக்கிறாள். ஓ! நீ எங்க மனசைத்தான் புழுதின்னு சொன்னாயா? ஆமாம்! ஆமாம்! அதென்னமோ நிஜம்தான்!

ஒண்ணா வந்தோம்; ஒண்ணா வேலை செஞ்சோம் என்பதல்ல. அதற்கும் அப்பால என்னமோ இருக்கு பாலா! சூரியன் தனியாத்தான் இருக்கு. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொடர்பு வெளிச்சம் மட்டுமில்லை. இன்னும் என்னென்னமோ இருக்கு. உனக்கும் எனக்கும் இடையிலேயும் அப்படி என்னென்னமோ இருக்கு!

லிங்க் பகிர்வு : திரு. சிவகுமார்

நன்றி: குமுதம் 27.2.1997
********************************************